போலீசார் தேர்தல் பணிக்கு சென்றதால் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூடல்-புகார் அளிக்க முடியாமல் பெண்கள் அவதி

குடியாத்தம் : போலீசார் தேர்தல் பணிக்கு சென்றதால், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் புகார் அளிக்க முடியாமல் பெண்கள் அவதிக்குள்ளாகினர்.பெண்கள் தனியாக புகார் அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இயங்கி வருகிறது.  இங்கு வரதட்சணை கொடுமை, பெண்களை கேலி கிண்டல் செய்வது, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னை குறித்து பெண்கள் புகார் அளிக்கலாம். இவற்றை பெண் காவலர்கள் விசாரணை செய்வார்கள்.

அதன்படி, குடியாத்தம் போலீஸ் சப் டிவிஷனுக்கு உட்பட்ட குடியாத்தம், மேல்பட்டி, பரதராமி, பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் புகார் அளிக்க குடியாத்தத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்கள் இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி காவல், வாகன சோதனை, தேர்தல் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செய்ய மாவட்ட காவல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, பெண் காவலர்கள் தேர்தல் சம்பந்தமான பணிக்கு சென்றதால் குடியாத்தத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் பூட்டப்பட்டது. இங்கு நேற்று பல்வேறு பிரச்னை காரணமாக புகார் அளிக்க வந்த பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இன்று சட்டப்பேரவைத் தேர்தல்  நடைபெற்றுக் கொண்டிருப்பதால் காலை முதல் புகார்களை பெற காவலர்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: