பிரசாரத்தில் மம்தா அதிரடி ஒற்றை காலில் மேற்கு வங்கத்திலும் 2 காலில் டெல்லியிலும் வெல்வேன்

சுன்சுரா: ‘ஒற்றை காலில் மேற்கு வங்கத்திலும், இரண்டு காலில் டெல்லியிலும் வெல்வேன்’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. ஏற்கனவே இரண்டு கட்ட வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்று மூன்றாவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்நிலையில் நான்காவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முதல்வர் மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நேற்று வாக்கு சேகரித்தார்.

சுன்சுராவில் நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பேசியதாவது: மேற்கு வங்கம் அதன் சொந்த மக்களால் தான் ஆளப்படும். நான் வங்கத்தை சேர்ந்த புலி. குஜராத்தில் இருந்து வரும் யாரும் மேற்கு வங்கத்தை ஆட்சி செய்ய முடியாது. நான் ஒற்றை காலில் மேற்கு வங்கத்தில் வெற்றி பெறுவேன். இரண்டு கால்களில் டெல்லியில் வெற்றி பெறுவேன். நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக நந்திகிராமில் பாஜ ஆதரவாளர்கள் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டு எனது காலில் காயம் ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் கிடைக்காததால் எம்பிக்கள் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி என்னை கிண்டல் செய்கிறார். நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான காரணம் என்ன? 3 அல்லது 4 கட்டங்களாக முடித்து இருக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு தேர்தலை சீக்கிரமாக நடத்தி முடித்து இருக்க கூடாதா? இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.

Related Stories: