ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா

மும்பை: ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மகாராஷ்டிராவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் உருவாக்கிய மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செய்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் வெடி பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் தேசிய விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ. அதிகாரிகள், குற்றப்பிரிவு உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வாஷேயை கைது செய்தனர். மும்பை போலீஸ் கமிஷனாரக இருந்த பரம் பீர் சிங் ஊரகாவல் படைக்கு மாற்றப்பட்டார்.

இட மாற்றத்துக்குப்பிறகு, பரம்பீர் சிங், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், பார்கள், ரெஸ்டாரண்டுகளில் இருந்து மாதா மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என்று அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் ராஷே உட்பட பல போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறியிருந்தார். இதனிடையே அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எஸ்.குல்கர்னி ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தியது. இதில் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: