தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி: புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வந்த நிலையில், ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். பொதுவாக வார விடுமுறை, அரசு விடுமுறை என தொடர்–்ந்து விடுமுறை வந்தால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்டத்திற்குள் சுற்றுலா பயணிகள் வர தடை நீடித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதித்தாலும், இ பாஸ் மற்றும் இ பதிவு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்பட்டது.

கோடை சீசன் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணத்தாலும், சட்டமன்ற தேர்தல் நடப்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், புனித வெள்ளி மற்றும் சனி,ஞாயிறு வார  விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து ஓரளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இது மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் வருகையால் நகரின் அனைத்து சாலைகளிலும், சுற்றுலா தலங்கள் செல்லும் சாலைகளிலும் வாகன நெரிசல் காணப்பட்டது. மேலும், ஊட்டியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. கடந்த ஓராண்டிற்கு மேல் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்த நிலையில், கோடை சீசன் துவங்கிய நிலையில், துவக்கத்திலேயே தற்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளதால் ஊட்டியில் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள், நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகளுக்கு தற்போது வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஓராண்டு காலமாக வியாபாரம் இன்றி சிரமப்பட்டு வந்த வியாபாரிகள் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: