வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்: கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டின

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் பாம்பன் வடக்கு பகுதியில் கடல் உள்வாங்கியதால் ஏராளமான நாட்டுப்படகுகள் தரை தட்டின. வங்கக்கடலில் அந்தமான் போர்ட் பிளேயர் துறைமுகத்தில் இருந்து கிழக்கு மற்றும் வடகிழக்கில் 400 கி.மீ தூரத்திலும், தாய்லாந்து புக்கெட் துறைமுகத்தில் இருந்து வடக்கு மற்றும் வடமேற்கில் 420 கி.மீ தூரத்திலும், மியான்மர் கடற்கரையில் இருந்து தெற்கே 640 கி.மீ தூரத்திலும் நடுக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடல் பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று பகல் 12.40 மணியளவில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடல் வானிலை வழக்கத்திற்கு மாறாக இருந்தது. மேலும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று கடல் திடீரென உள்வாங்கியது. இதனால் கடல்நீர் வற்றியதால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான நாட்டுப்படகுகள் தரை தட்டியும், மணலில் சிக்கியும் காணப்பட்டது.

Related Stories: