பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு கோயில்களில் ஓபிஎஸ் தரிசனம்: பெரியகுளத்தில் பரபரப்பு

பெரியகுளம்: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர், நேற்று தனது சொந்த ஊரான பெரியகுளத்தில், தொகுதி அதிமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், திடீரென பிரசாரத்தை ரத்து செய்த ஓபிஎஸ், முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணியளவில், பெரியகுளம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மாரியம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தார். தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, ஓபிஎஸ் கோயில்களில் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக நிர்வாகி வீட்டில் ரெய்டு: போடியில் உள்ள அதிமுக முக்கிய பிரமுகர்கள், ஓபிஎஸ் மகனுக்கு நெருக்கமான நண்பர்கள் உள்ளிட்ட பலரது வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போடி சுப்புராஜ் நகரில் ஓபிஎஸ் அலுவலகத்தின் பின்புறம் உள்ள தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால், இதில் ரூ.24,500 மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: