கேரளாவில் உச்சகட்ட தேர்தல் பிரசார நிறைவு விழாவுக்கு தடை: கொரோனா அச்சத்தால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மலப்புரம் மக்களவை தொகுதியில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. இது நாளை (4ம் தேதி) இரவு 7 மணியுடன் நிறைவடையும். வழக்கமாக கேரளாவில் பிரசார நிறைவு நிகழ்ச்சி பிரமாண்ட விழா போல நடத்தப்படும். முக்கிய சந்திப்புகளில் கட்சியினர் திரண்டு மேள, தாளங்கள் முழங்க, கலைநிகழ்ச்சிகளுடன் உச்சகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு நிறைவு செய்வர். இதை ‘கலாசக்கொட்டு’ என்பர். இது மிகவும் பிரமாண்டமாக ஒரு திருவிழா போல நடைபெறும். பொதுமக்களுக்கும் நல்லதோர் பொழுதுபோக்கு. மேலும் அவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் இருக்கும்.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020 டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த கலாசக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி டிக்காரம் மீனாவின் பரிந்துரையை தொடர்ந்து, மத்திய தேர்தல் ஆணையம் (சிஇசி), கேரளாவில் ‘கலாசக்கொட்டு’ எனும் உச்சகட்ட தேர்தல் பிரசார நிறைவு விழாவுக்கு இம்முறையும் தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் 3 கூட்டணிகளுக்கும் இடையே மோதலுக்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுபோல நக்சல் அச்சுறுத்தல் உள்ள மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்ெபட்டா, ஏரநாடு, நிலம்பூர், வந்தூர், கொங்காட், மன்னார்க்காடு மற்றும் மலம்புழா தொகுதிகளில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையும். மற்ற பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். ஆனால் நக்சல் பகுதிகளில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், பிரசாரம் மற்றும் அதுதொடர்பான பொருட்களை எடுத்து செல்ல கட்சிகள் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது. இதை அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளைமுதல் தொலைக்காட்சிகள் மற்றும் பிற மின்னணு ஊடகங்களில் ேதர்தல் பிரசாரங்களை கட்சிகள் தவிர்க்க வேண்டும். இதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதுபோல திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் இன்றுமுதல் வாக்குப்பதிவு நாள் வரை பைக் பேரணிகளை நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Related Stories: