வாக்குப்பதிவு நெருங்கி வரும் நேரத்தில் டிஜிட்டல் முறையில் பணம் அனுப்பும் நபர்கள் பட்டியலை வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சியில் காவலர்களுக்கு பணம் விநியோகம் செய்ய சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் மாற்றம், மலைக்கோட்டை உதவி கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம்தான் எடுத்துள்ளது. இந்த பிரச்னை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படாது. திருச்சி சம்பவம் தொடர்பாக திமுகவும் புகார் கொடுத்துள்ளது. அதுவும் தேர்தல் ஆணையத்துக்கு போயுள்ளது. ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து ரூ500, ரூ1000, ரூ2000 என தொடர்ந்து அதிகளவில் டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் நபர்களை கண்காணித்து தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக  இதுவரை 133 புகார்கள் சிவிஜில் மூலம் வந்துள்ளது. இதில் 57 புகார்கள் சரியானது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 4ம் தேதி இரவு 7 மணி வரை பிரசாரம்: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வருகிற 4ம் தேதி இரவு 7 மணி வரை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்யலாம். அதனால் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கருத்துக்கணிப்பு மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. சமூக வலைதளங்கள் மூலமும் பிரசாரம் செய்ய கூடாது. இதை கண்காணிப்பது சிரமம் என்பதால், யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

வாக்களிக்க கொரோனா சான்று: கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து பிபிகிட் உடை அணிந்தும், மருத்துவ அதிகாரியின் சான்றிதழுடன் வந்து வாக்களிக்க வேண்டும். வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பிபிகிட் உடை வாக்குச்சாவடி மையத்திலேயே வழங்கப்படும்.

கடைசி கட்ட பணப்பட்டுவாடாவை தடுக்க குழு

கடைசி நேர பண பரிமாற்றத்தை கண்காணிக்க கூடுதல் கண்காணிப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகமாக பணம் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: