ஐசிசி ஒருநாள் தரவரிசை வேகம் புவனேஷ்வர் முன்னேற்றம்

துபாய்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அசத்தலாக பந்து வீசிய புவனேஷ்வர்குமார், பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி  தரவரிசை பட்டியலில் 11வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வேகம் புவனேஷ்வர் குமார்  காயம் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்றார். அதிலும் ஒருநாள் தொடரில் 3 ஆட்டங்களிலும் சிக்கனமாகவும், சிறப்பாகவும் பந்து வீசி 6 விக்கெட்களை அள்ளினார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய புவனேஷ்வருக்கு ‘தொடர் நாயகன்’ விருது தராதது ஆச்சர்யமாக இருப்பதாக கேப்டன் விராத் கோஹ்லி கூட தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அசத்திய புவனேஷ்வர், ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் 9 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து தொடரில் சாதித்தும், ஆட்ட நாயகன் விருது கிடைக்காத ஷர்துல் தாகூர் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 93வது இடத்தில் இருந்து 80 இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் 2 இடங்களில் டிரென்ட் போல்ட்(நியூசி), முஜிப் உர் ரகுமான்(ஆப்கான்) ஆகியோர் தொடருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் அசத்திய மாட் ஹென்றி(நியூசி) 3வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடாத பும்ரா 3வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அந்த தொடரில் சதம், அரைச்சதம் விளாசிய கே.எல்.ராகுல்  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 31வது இடத்தில் இருந்து 27வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். முதல்முறையாக ஹர்திக் பாண்டியா 42 இடத்துக்கும், ரிஷப் பந்த் 91வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். விராத், பாபர் அஸம்(பாக்), ரோகித்,  ராஸ் டெய்லர்(நியூசி) ஆகியோர் முதல் 4 இடங்களிலேயே தொடர்கின்றனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 11 இடங்களில் எந்த மாற்றமுமில்லை. அந்த 11 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீரரான ரவீந்திர ஜடேஜா 9வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து தொடர் மூலம் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் அசத்திய ஹர்திக் பாண்டியா 12வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Related Stories: