கார்பென்டரை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்: 6 பேரை கைது செய்த தனிப்படை போலீஸ்

பெங்களூரு: பெங்களூரு ஊரகம் ஜிகினி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஹாரகத்தே கிராமத்தில் தங்கியிருந்து கார்பென்டராக வேலை பார்த்து வந்தவர் விஸ்வநாத் (23), உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். மார்ச் 28ம் தேதி இரவு இவர் வேலை முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றபோது, காரில் வந்த 4 பேர் இவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி கடத்தி சென்றனர். நேற்று முன்தினம் காலை விஸ்வநாத்தின் செல்போனில் இருந்தே அவரது சகோதரரை தொடர்பு கொண்டு, ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஸ்வநாத்தின் உறவினர்கள், உடனே இது குறித்து ஜிகினி போலீசில் புகார் அளித்தனர்.

எஸ்.பி ரவி சென்னனவர் வழிகாட்டுதலின் பேரில் கூடுதல் எஸ்.பி லட்சுமி கணேஷ் தலைமையிலான, ஜிகினி இன்ஸ்பெக்டர் பி.கே சேகர், சப் இன்ஸ்பெக்டர் சிவலிங்கா நாயக் ஆகியோர் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலை தேடி வந்தனர். இதற்கிடையில் கடத்தல் கும்பலின் செல்போன் அலைக்கற்றை வைத்து, அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் பின்தொடர்ந்தனர். அவை தமிழக மாநிலம் ஒசூர் நீலகிரி தோப்பில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்து, விஸ்வநாத்தை மீட்டனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவை சேர்ந்த ஜாகீத் உஷேன், ரூபேஷ், அமீன், சமீர் பாட்ஷா, சுபாஷ், முகமது அன்தான் என்று தெரியவந்தது. பணத்திற்கு ஆசைப்பட்டு கார்பென்டரை கடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: