திருமங்கலத்தில் தொண்டர்கள் மூலம் வாக்காளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பணப்பட்டுவாடா!: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிமுக தொண்டர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அம்பலமாகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. தேர்தல் காலம் என்பதால் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பரிசுப் பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினரும் அதனையும் மீறி வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் தனது தொண்டர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்துள்ளார். திருமங்கலத்தில் அண்ணாநகர், ஆலம்பட்டி, வலையன்குளம் ஆகிய கிராமங்களில் அதிமுக தொண்டர்கள் மூலம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் விநியோகிக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்காளர்களுக்கு அமைச்சர் சார்பில் பணம் விநியோகிப்பது குறித்து பறக்கும் படையினருக்கும், தேர்தல் அதிகாரிகளிடமும் எதிர் கட்சியினர் தகவல் அளித்தனர். ஆனால் அமைச்சர் உதயகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: