கர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு ஊர்வலம் நடத்த தடை

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், அங்கு ஊர்வலம், போராட்டம், பேரணி உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பிறகு எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா வைரஸ் தடுப்பு விதிகள் 100 சதவீதம் கடைபிடிக்கவேண்டும். முக கவசம் அணிவது  கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் நபர்களிடம் இருந்து தற்போது அபராதம் வசூலிக்கப்படுகிறது.

அதே நேரம் சுகாதார விதிகள் கடைபிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊர்வலம், போராட்டம் நடத்தவும் தடைவிதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதில் தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சான்றிதழ் அவசியமாகும். எந்த காரணத்தை முன்னிட்டும் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படாது. அதே நேரம் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை 100 சதவீதம் தவறாமல் கடைபிடிக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

Related Stories: