திருவில்லிபுத்தூரில் எல்லை பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சார்பில் அடையாள அணிவகுப்பு நடந்தது. தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ல் நடக்கிறது. தேர்தலின்போது கலவரம் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவ படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் அடையாள அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூருக்கு நேற்று வந்த எல்லை பாதுகாப்பு படையினர், நகர் முக்கிய வீதிகளில் அணிவகுத்து சென்றனர். அவர்களுடன் திருவில்லிபுத்தூர் போலீசாரும் இணைந்து சென்றனர்.

திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணிக்கு டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமை வகித்தார். இதில் நகர் இன்ஸ்பெக்டர் வினோதா, கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர், வத்திராயிருப்பு எஸ்ஐ உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர் முக்கிய வீதிகள் வழியாக நடந்த அணிவகுப்பு பேரணி, வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, பெரிய கடை பஜார், பஸ்நிலையம் சின்னக்கடை பஜார் வழியாக சென்று மீண்டும் ராமகிருஷ்ணாபுரம் பகுதியை வந்தடைந்தது.

Related Stories: