மகாராஷ்டிராவில் ‘ஆக்ஸிடென்டல்’ அமைச்சர் சர்ச்சை: அகமதாபாத்தில் சரத்பவார்-அமித் ஷா சந்திப்பு?..‘பொடி’ வைத்து பேசியதால் திடீர் பரபரப்பு..!

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் பரபரப்புக்கு மத்தியில் அகமதாபாத்தில் சரத்பவாரும், அமித் ஷாவும் சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்பானி வீட்டருகே நின்ற மர்ம கார் விவகாரத்தில், காரின் உரிமையாளர் மரணம், போலீஸ் அதிகாரி கைது, போலீஸ் கமிஷனர் இடமாற்றம், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ரூ.100 கோடி வசூல் குற்றச்சாட்டு என்று அடுத்தடுத்த அரசியல் சலசலப்புகள் இருந்து வருகின்றன. இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘அனில் தேஷ்முக் ஒரு ‘ஆக்ஸிடென்டல்’ உள்துைற அமைச்சர். ஜெயந்த் பாட்டீல் மற்றும் திலீப் வால்சே ஆகியோர் பின்வாங்கியதால், அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது’ என்றார்.

இவரது பேச்சு கூட்டணியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தேசியவாத  காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், சஞ்சய் ராவத் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றிருந்தனர். அங்கிருந்து வரும் வழியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிறிது நேரம் தங்கினர். அன்றைய தினம் தனது பேத்திகளை பார்ப்பதற்காக சென்ற அமித் ஷாவும் அகமதாபாத்தில் தங்கியிருந்தார். இதற்கிடையே சரத் பவார், பிரபுல் படேல் ஆகியோர் அமித் ஷாவை சந்தித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.  இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷாவிடம், சரத்பவார், பிரபுல் படேல் ஆகியோர் தங்களை சந்தித்தனரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘எல்லாவற்றையும் பகிரங்கமாக வெளியே சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்றார். அமித் ஷாவின் பேச்சு, மகாராஷ்டிராவில் மேலும் பரபரப்பையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், ‘சரத்பவாரும், பிரபுல் படேலும் அகமதாபாத்தில் இருந்தனர் என்பது உண்மைதான். ஆனால்  அவர்கள் அமித் ஷாவை சந்திக்கவில்லை. முக்கிய பிரச்னைகளில் இருந்து  கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற செய்திகள் வருகிறது. இதில் பாஜகவின் சதி உள்ளது’ என்றார். உண்மை என்னவென்றால், சரத்பவாரும், பிரபுல் படேலும் மும்பை திரும்பும் வழியில், அன்றிரவு 9.30 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இறங்கினர். பின்னர் நேராக அதானியின் இல்லத்திற்கு சென்றனர். இரவு முழுவதும் அங்கு தங்கிவிட்டு மறுநாள் காலை உணவு முடிந்து வெளியே சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: