தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை-விளாத்திகுளத்தில் கனிமொழி எம்பி பேச்சு

விளாத்திகுளம் : தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விளாத்திகுளம் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளர் மார்க்கண்டேயனை ஆதரித்து கனிமொழி எம்பி நேற்று மேலக்கரந்தை, பாப்பாத்தி, கோட்டூர் வீரப்பட்டி, கரும்பூர், மீனாட்சிபுரம், கடலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது கனிமொழி எம்பி பேசியதாவது:

 கொரோனாவை காரணம் காட்டி எம்பிக்களுக்கு வழங்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்திய மத்திய அரசு பத்தாயிரம் கோடி மதிப்பில் நாடாளுமன்றம் கட்டிடம் கட்டி வருகிறது. தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசையும் அதிமுக அரசையும் அகற்ற பொதுமக்கள் தயாராகி விட்டனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தற்போது செயலிழந்த நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்னோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசு நிவாரணம் வழங்கவில்லை.விளாத்திகுளம் தொகுதி பல ஆண்டுகளாக எந்த வேலை வாய்ப்பும் இல்லாமல் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் இல்லாமல் இருந்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விளாத்திகுளம் தொகுதியில் இளைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் நிச்சயமாக கொண்டுவரப்படும்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் தொலை நோக்குடனும் எதிர்கால சந்ததியினர் நிரந்தரமான பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

கொரோனா நிதி உதவி ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்படும். தமிழகத்தில் மகளிரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அரசு வேலைகளில் தமிழக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மார்க்கண்டேயனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: