அதிகாரிகள் துணையுடன் பாஜவுக்கு சாதகமாக பதிவு? தபால் வாக்குப்பதிவில் முறைகேடு: திமுகவினர் முற்றுகையால் காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி: காரைக்குடியில் அதிகாரிகள் துணையுடன் முதியோர் தபால் வாக்குகள் பாஜவிற்கு போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதிகாரிகளை திமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்ைக மாவட்டம்,   காரைக்குடி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, அதிமுக கூட்டணியில் பாஜ வேட்பாளர் எச்.ராஜா போட்டியிடுகின்றனர். ,காரைக்குடி தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 663 பேரும், மாற்றுத்திறனாளிகள் 174 பேரும் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தபால் வாக்குகளை பெற 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று தபால் வாக்குகளை பெறுவர். தபால் வாக்களிப்பதை வீடியோ பதிவும் செய்வார்கள்.

 சாக்கோட்டை ஒன்றியம் பீர்க்கலை காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்று தபால் வாக்கு பெற அதிகாரிகள் குழுவினர் வந்தனர். அவர்கள் நேரடியாக முதியவர்களின் வீடுகளுக்கு செல்லாமல் பாஜவை சேர்ந்த குறிப்பிட்ட நபரிடம் தபால் வாக்கை கொடுத்து அனுப்பி, அக்கட்சிக்கு சாதகமாக வாக்குகளை பெற வைத்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திமுக ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை கூறுகையில், ‘‘பீர்க்கலைகாடு பகுதியில் தபால் வாக்கு பெறும் அதிகாரிகள் நேரடியாக செல்லாமல், பாஜவை சேர்ந்தவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அவர் வாக்குக்கு பணம் கொடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியாமலேயே கைரேகை பதிவு செய்துள்ளார். வாக்குப்பதிவை முடித்துவிட்டு பெயருக்கு வீடியோ எடுத்து செல்ல முயன்றனர். இதுபோல இப்பகுதியில் 33 வாக்குகளை மாற்றி போட்டுள்ளனர். இது அனைத்தும் திமுக, காங்கிரசுக்கு சாதகமான வாக்குகள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு பெற்ற வாக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேந்திரன் கூறுகையில், ‘‘தபால் வாக்கு புகார் தொடர்பாக உரிய விசாரணை செய்யப்படும். தபால் வாக்குகள் பெறும் அதிகாரிகள் குழு மற்றும் அரசியல் கட்சி ஏஜென்ட்களுக்கு மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு விளக்கப்படும். அதிகாரிகள் வீடுகளுக்கு செல்வது குறித்த ரூட் சாட் ஏஜென்ட்களிடமும் இருக்கும். அதனை வைத்து ஆய்வு செய்து கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: