அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வந்து விட்டது-புவனகிரி பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்பி பேச்சு

புவனகிரி : கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை.கி. சரவணன் எம்எல்ஏவை ஆதரித்து நேற்று புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்று பேசியதாவது, இங்கே போட்டியிடும் திமுக வேட்பாளர் மக்களோடு மக்களாக பழகி தினமும் மக்களுக்கு தொண்டு செய்தவர்.  வேட்பாளர் எங்கே என்று நீங்கள் கேட்கலாம். இப்படி மக்களுக்காக ஓடி, ஓடி உழைத்ததாலேயே தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார்.

விரைவில் அவர் இங்கு தொகுதிக்கு வந்து வாக்கு சேகரிப்பார். அவர் என்னுடன் வந்து இருப்பதாக கருதி அனைவரும் அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.   ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் ஏப்.6. புவனகிரி தொகுதியில் சென்ட் தொழிற்சாலை, பேருந்து நிலையம் புனரமைப்பு, மழை உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

ஆம்புலன்சுக்கு வழி விடச் சொன்ன கனிமொழி எம்பி  

கீரப்பாளையத்தில் பிரசாரத்தை ஆரம்பித்து பேசத் தொடங்கியதும் திடீரென ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதையடுத்து தொண்டர்களுக்கு மைக்கில் உத்தரவிட்ட கனிமொழி எம்பி. ஆம்புலன்சுக்கு வழி விடுமாறு கூறினார். ஆம்புலன்ஸ் அந்த பகுதியை கடந்து செல்லும் வரை காத்திருந்த அவர், பின்னர் பேசத் துவங்கினார். அப்போது இந்த ஆம்புலன்ஸ் திட்டம் கூட திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த உன்னதமான திட்டம்தான் என கூறினார். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

Related Stories: