புதிய மதுபானக்கொள்கை கவர்னரிடம் பா.ஜ தலைவர்கள் மனு

புதுடெல்லி; டெல்லியில் ஆம்ஆத்மி அரசு அமல்படுத்தி உள்ள புதிய மதுபானக்கொள்கையை நிறுத்தி வைத்து உத்தரவிடக்கோரி பா.ஜ தலைவர்கள் கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். டெல்லியில் புதிய மதுபானக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கையின்படி இனிமேல் 21 வயது நிரம்பிய அனைவரும் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மது அருந்த 25 வயதுக்கு மேல் தான் அனுமதி இருந்தது. தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பார்கள், உணவு விடுதிகள், ஓட்டல்களில் மது வழங்குவதிலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசின் வருமானத்தை  அதிகரிக்கும் ேநாக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும் பா.ஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியினர் இந்த புதிய கொள்கையை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டை அவர்கள் முற்றுகையிட்டனர். நேற்று பா.ஜ தலைவர்கள் ஆம்ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடும்படி கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து மனு அளித்தனர். டெல்லி பா.ஜ தலைவர் ஆதேஷ்குப்தா தலைமையில் நேற்று கவர்னர் மாளிகை சென்ற பா.ஜ தலைவர்கள் கவர்னர் அனில்பைஜாலை சந்தித்தனர். அப்போது அவர்கள் டெல்லி அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மதுபான கொள்கை குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் எடுத்துக்கூறினார்கள்.

பின்னர் தாங்கள் கொண்டு வந்த மனுவை கவர்னர் அனில் பைஜாலிடம் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆம்ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபானக்கொள்கையால் டெல்லி அரசு சார்பில் நடத்தப்படும் 500 மதுபானக்கடைகள் மூடப்படும். ஆனால் தனியார் மதுபானக்கடைகள் தாராளமாக  திறக்க அனுமதி வழங்கப்படும். இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் ஒவ்வொரு வார்டிலும் 3 மதுக்கடைகள் திறக்க டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு நிச்சயமாக மக்கள் நலன் கொண்டது அல்ல. இது குடியிருப்பு பகுதிகளில் அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பாதிக்கும். ஏனெனில் தண்ணீர் சப்ளையை போல் சரிக்கு சமமாக டெல்லியில் மதுபானம் சப்ளை செய்யப்படும்.

500 மதுக்கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் போது தனியார் மதுபான வியாபாரிகளுக்கும், அரசுக்கும் இடையே தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தம் நடக்கும். இதை நிச்சயம் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் மது அருந்தும் வயதை 25ல் இருந்து 21 ஆக குறைப்பது சட்டப்படியும், தர்மப்படியும் தவறானது. எனவே தேவையில்லாத அந்த நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: