தோள்பட்டையில் பலத்த காயம் ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம்

புனே: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதுடன், விரைவில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் நடுகள வரிசையில் களமிறங்கி அசத்துபவர் ஷ்ரேயாஸ் அய்யர் (26). இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியின் 8வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ அடித்த பந்து பவுண்டரிக்கு செல்லாமல் தடுத்தார் ஸ்ரேயாஸ். அப்போது தடுமாறி விழுந்தவரின் இடது தோள்பட்டையில்  பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் அவதிப்பட்ட அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் ஷுப்மன்  கில் பீல்டிங் செய்தார். பின்னர் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது தோள்பட்டை எலும்பு விலகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஓய்வுடன் சிகிச்சை தேவை என்பதால்  எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். தொடரில் இருந்து விலகியுள்ள ஷ்ரோயாஸ், சிகிச்சைக்குப் பின்னர் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட்  அகடமியில் பயிற்சி பெறுவார். உடல் தகுதியை நிரூபித்த பிறகே மீண்டும் அணியில் இணைய முடியும்.

இந்நிலையில்  நடப்பு ஐபிஎல் தொடர் ஏப். 9ம் தேதி தொடங்குகிறது.  காயம் காரணமாக அந்த தொடரிலும் ஷ்ரேயாஸ் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிது. அது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். காரணம் அவர் டெல்லி அணியில் கேப்டனாக இருக்கிறார். அவரது தலைமையில்தான் டெல்லி முதல்முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இதுகுறித்து டெல்லி அணி வட்டாரங்கள், ‘ஷ்ரேயாஸ் விரைவில் குணமடைவார். முதல் சில போட்டிகளில் விளையாட முடியாவிட்டாலும், எஞ்சிய போட்டிகளில் கட்டாயம் விளையாடுவார். அவர் உறுதியானவர். இந்த சீசனிலும் அணியை வழி நடத்துவார்’ என்று கூறுகின்றன. டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்.10ம் தேதி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பையில் விளையாட உள்ளது. அந்த அணியில் ஆர்.அஷ்வின், அஜிங்க்யா ரகானே, ஷிகர் தவான், பிரித்வி ஷா, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பன்ட், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், கிறிஸ் வோக்ஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், சாம் பில்லிங்ஸ், டாம் கரன் , ஸ்டீவன் ஸ்மித், காகிசோ ரபாடா என முன்னணி வீரர்கள் உள்ளனர்.

Related Stories: