சொன்னாரே செஞ்சாரா? வெற்றி பெற்றார்; சென்னைக்கு பறந்தார்; மக்களை மறந்தார்: அவினாசி தொகுதி எம்எல்ஏ தனபால்

‘‘எங்க தொகுதி எம்எல்ஏவை பார்த்து பல வருஷம் ஆச்சுங்க... எங்களது குறைகளை யாரிடம் போய் சொல்வது? ஆளும்கட்சி எம்எல்ஏன்னுதான் பேரு. ஆனா சந்திக்கவே முடியல. நிர்க்கதியாக நிற்கிறோம். தொகுதிக்கும், அவருக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி, சென்னை சென்று, தலைமறைவாகி விட்டாரு...’’ இப்படி புலம்புவது அவினாசி சட்டமன்ற தொகுதி மக்கள். இவர்களை புலம்பவிட்டது இத்தொகுதி அதிமுக எம்எல்ஏ, சபாநாயகர் தனபால்.  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று அவினாசி. இத்தொகுதி எம்எல்ஏ தனபாலின் செயல்பாடு கடந்த 5 ஆண்டுகளாக, தொகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வாக்குறுதிகளை கூறி வெற்றிபெற்ற இவர், சபாநாயகர் ஆனதும் ெசன்னை ெசன்றுவிட்டார். தொகுதிக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என தொகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர், தெருவிளக்கு, தார்சாலை, விவசாயம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார் என தொகுதி மக்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இங்கு, 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த தொகுதி எம்எல்ஏ என்கிற முறையில் இவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள். இத்தொகுதிக்கு உட்பட்ட அவினாசி பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள சேவூர் ரோடு பிரிவு நால்ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது. இதை தவிர்க்க, இச்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் ேகாரிக்கை விடுத்தனர். ஆனால், கண்டுகொள்ளவில்லை.

 சங்குமாங்குளம், தாமரைக்குளம், கவுசிகா நதி பாதை மற்றும் அன்னூரில் இரண்டு குளம், குட்டைகளை தூர்வாரி, மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையும், கண்டுகொள்ளவில்ைல. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற இவர் ெதாகுதிக்குள் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

 அவினாசி, அன்னூரில் 600க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவை அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை சரிசெய்ய தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அன்னூரில் 2,200 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும், இதற்காக ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு காற்றோடு போய்விட்டது. அவினாசி, அன்னூர், மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளுக்கு ரூ.65 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதையும் நிறைவேற்றவில்லை. இப்படியாக, தொகுதி முழுவதும் எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மக்களையும் நேரில் சந்திக்கவில்லை. சந்திக்க வரும் மக்களிடம் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை. தொகுதியை அடியோடு புறக்கணித்துவிட்டார் என எம்எல்ஏ தனபால் மீது இத்தொகுதி மக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைக்கின்றனர். எந்த பணியும் செய்யாமல் இவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் தருகிறது என்கிறார்கள் மக்கள்.

‘மக்கள் பிரச்னையை தீர்த்துள்ளேன்’

சபாநாயகர் தனபால் கூறும்போது, ‘‘தொகுதிக்குள் வருவதே இல்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது. மாதம் ஒருமுறை தொகுதிக்குள் வந்து செல்கிறேன். மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறேன். சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைப்பதில் முன்மாதிரியாக உள்ளேன். சட்டமன்றம் நடக்கும்போது மட்டும் இத்தொகுதிக்குள் வர முடியாத நிலை ஏற்படும். இதர நாட்களில் தொகுதிக்குள் வந்து, மக்கள் பிரச்னையை கேட்டு, முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன்’’ என்றார்.

‘தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை’

அன்னூர் ஒன்றிய திமுக செயலாளர் இ.ஆனந்தன் கூறியதாவது: அன்னூர் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் நிறைவேற்றுவேன். இத்தொகுதியில் உள்ள நூலகத்தை தரம் உயர்த்துவேன். அவினாசி தாலுகாவில் கோர்ட் கொண்டு வருவேன், பள்ளிகளை தரம் உயர்த்துவேன். அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி, தரம் உயர்த்துவேன் என சபாநாயகர் தனபால் கூறினார். ஆனால், இதில், ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. அவினாசி-அத்திக்கடவு திட்டம் என்ற பெயரில் காளிங்கராயன் உபரிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இது உண்மையான அவினாசி-அத்திக்கடவு திட்டம் இல்லை. பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். குளங்களில் தண்ணீர் நிரப்ப ஏதுவாக பெரிய அளவிலான குழாய் பதிக்காமல் 6 அங்குலம், 8 அங்குலம் அளவில் சிறிய குழாய்களையே பதித்துள்ளனர். இதுவும், மக்களை ஏமாற்றும் செயல். குளம், குட்டைகள் வறண்டதுதான் மிச்சம். அரசு கலைக்கல்லூரி அமைத்து தருவேன் என்றார். ஆனால், இதுவரை கல்லூரி அமைக்கப்படவில்லை. தனபால் வெற்றிபெற்றது முதல், தொகுதி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

Related Stories: