சிவசேனாவை விமர்சனம் செய்ததால் பெண் எம்பிக்கு ‘ஆசிட்’ வீச்சு மிரட்டல்: மக்களவை சபாநாயகருக்கு கடிதம்

புதுடெல்லி: சிவசேனா கட்சியை விமர்சனம் செய்ததால், சுயேட்சை பெண் எம்பிக்கு ‘ஆசிட்’ வீச்சு மிரட்டல் வந்துள்ளதாக அவர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் பேசிய மகாராஷ்டிரா மாநில அமராவதி தொகுதி சுயேட்சை எம்பி நவ்னீத் கவுர் ராணா, ‘மும்பை முன்னாள் போலீஸ்  கமிஷ்னர் பரம் பிர் சிங்கின் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, முதல்வர்  உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு பதவி விலக வேண்டும்’ என்றார்.

இதற்காக சிவசேனா கட்சியை சேர்ந்த எம்பி அரவிந்த் சாவந்த், ‘மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு எதிராக மக்களவையில் பேசியதற்காக சிறையில் அடைக்கப்படுவீர்கள்’ என்று எச்சரித்ததாக அரவிந்த் சாவந்த் மீது நவ்னீத் கவுர் ராணா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிவசேனா கட்சிக்கு எதிராக பேசியதால், எனக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் மூலமாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. என் மீது ஆசிட் தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில், ‘இன்று சிவசேனா  நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் என்னை அச்சுறுத்திய விதம், இது  எனக்கு மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பெண்களுக்கும் ஒரு அவமானம். எனவே நான்  இதற்கு எதிராக கடுமையான போலீஸ் நடவடிக்கையை நாடுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: