நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல்கருட சேவை நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாக போற்றப்படுவதுமான கும்பகோணம் அருகே நாச்சியார்கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவ தேர் திருவிழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக நான்காம் நாளான நேற்று மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவை நடைபெற்றது. உற்சவராகவும், மூலவராகவும் உள்ள கல்கருடன் ஆண்டுக்கு இருமுறை மார்கழி மற்றும் பங்குனி விழாக்களில் மட்டும் வீதி உலா செல்வது வழக்கம். நேற்றுமாலை 6 மணிக்கு மூலவர் கல் கருடன் சிறப்பு அலங்காரத்தில் வாகன மண்டபம் எழுந்தருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 28ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் 30ம் தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Related Stories: