பொள்ளாச்சி தொகுதியில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்-திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் உறுதி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன்  நேற்று, நகராட்சிக்குட்பட்ட 17,18 மற்றும் 19வது வார்டுகளில், தாரை  தப்பட்டை முழங்க வீதியாக சென்று, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு  சேகரித்தார். அப்போது, அவரை பெண்கள் ஆரத்தி எடுத்த வரவேற்றனர்.  முன்னதாக, ஜூப்லி கிணறு வீதியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில், பூரண கும்ப  மரியாதை செய்யப்பட்டது.

இதில், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்  தென்றல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, வட்ட  செயலாளர்கள் தர்மராஜ், திருமலைராஜா, பழனிசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்  அமுதபாரதி, பொறுப்புக்குழு உறுப்பினர் மாணிக்கராஜ், முன்னாள் கவுன்சிலர்  மணிகண்டன் மற்றும் கார்த்திகேயன், சபாபதி, மனோகரன், மணிமாறன், காங்கிரஸ்  கட்சி ஜோதிமணி, கே.எல்.சி ராமகிருஷ்ணன், கவிதா, அருண் மற்றும் கூட்டணி  கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 இப்பிரசாரத்தின்போது, திமுக  வேட்பாளர் டாக்டர் வரதராஜன் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகர் மற்றும்  சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட வசதியாக  பாலக்காடு ரோட்டில் உள்ள நகராட்சி மேல்நிலை பள்ளி மைதானத்தை சீர்படுத்தி,  நவீன விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக  உள்ளது. ஆனால், பொதுமக்களின் இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்  என்றும், அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறிவிட்டு, அதனை  செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அதுபோல் அனைத்து வார்டுகளிலும் பல  ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட இளைஞர்கள் உடற்பயிற்சி மைய இடத்தை  சீர்படுத்தாததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையை  மாற்றியமைக்க காலம் நெருங்கி விட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக  வெற்றி பெற்றவுடன், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பொள்ளாச்சி நகரில்  நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பதுடன், உடற்பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை  எடுக்கப்படும். பல்வேறு விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,  தேசிய அளவில் முன்னேறி செல்ல இளைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை  எடுக்கப்படும். நான் வெற்றி பெற்றவுடன், மக்களிடம் கூறிய அனைத்து  வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்’ என்றார்.

Related Stories: