ஜனதா ஊரடங்கின் ஓராண்டு நினைவு நாள் 2 நாளில் 90,797 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: கொரானோ பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி நாடு முழுவதும் முதல் முறையாக பிரதமர் மோடி ஜனதா ஊரடங்கு எனும் ஒருநாள் ஊரடங்கை அறிவித்தார். தற்போது ஓராண்டு ஆகியும் கொரோனாவின் கோரம் குறைந்தபாடில்லை. கடந்த 2 நாளில் நாடு முழுவதும் 90,797 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா காலடி எடுத்து வைத்த நிலையில், மார்ச் மாதம் அதன் வேகத்தை அதிகரித்தது. பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஜனதா ஊரடங்கு எனும் மக்கள் ஊரடங்கை அறிவித்தார். கொராேனாவுக்காக விதிக்கப்பட்ட நாடு தழுவிய முதல் ஊரடங்கு இதுவே. அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. அத்தியவாசியத் தேவையைத் தவிர வேறெதற்கும் மக்கள் வெளியில் வரவில்லை. மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் முற்றத்தில், பால்கனியில் நின்று கொண்டு கை தட்டி, 5 நிமிடம் மணியோசை எழுப்பி மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் மரியாதை செலுத்த பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்பின் மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின் பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனதா ஊரடங்கு அறிவித்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. நாடு முழுவதும் கடந்த 12வது நாளாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,951 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் புதிதாக 90,797 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 1,16,46,081 ஆகும்.  தற்போது 3,34,646 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோரின் சதவீதம் 95.75ஆக குறைந்துள்ளது. தினசரி நோய் பாதிப்பானது 130 நாட்களில் அதிகபட்சமாகும். புதிதாக 212 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,59,967ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 72 நாட்களில் அதிகப்பட்ச உயிரிழப்பாகும்.

Related Stories: