சென்ட்ரல் ரிட்ஜ் படுகையை மீட்டெடுக்க 6 பேர் குழு: அமைச்சர் கோபால்ராய் தகவல்

புதுடெல்லி: பல்லுயிர் செறிவூட்டல் மூலம் சென்ட்ரல் ரிட்ஜ் படுகைகளை மீட்டெடுப்பதற்காக டெல்லி அரசு ஆறு பேர் கொண்ட ஆலோசனைக்  குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால்ராய் கூறியதாவது: சென்ட்ரல் ரிட்ஜ் படுகைகளை மீட்டெடுப்பதற்கான திட்டத்திற்கு கடந்த மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக சென்ட்ரல் ரிட்ஜ் படுகைகளில் மெக்சிகன் மரங்களான “விலாயதி கிகார்”  (புரோசோபிஸ் ஜூலிப்ளோரா) ஆகியவற்றை மாற்றிவிட்டு அவற்றிற்கு மாற்றாக பூர்வீக இன மரங்கள் நடப்படும். இந்த திட்டப்பணிகளை அமலாக்கம் செய்வதற்காக இந்த ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு,முதன்மை செயலாளர் (சுற்றுச்சூழல் மற்றும் வன) தலைமையில்  செயல்படும். இதில், வன முதன்மை தலைமை பாதுகாவலர் மற்றும் பிரபல  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சி ஆர் பாபு, பிரதீப் கிரிஷென், ரீனா குப்தா  மற்றும் சுதத்யா சின்ஹா ​​ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  அடங்குவர். அனைத்து அம்சங்களிலும் திட்டத்தை செயல்படுத்துவதை இக்குழு மேற்பார்வையிடும். இதன்மூலம் சென்ட்ரல் ரிட்ஸ் படுகையில் இருந்து “கிகார் எராடிகசன்” என்கிற கடைசி இலக்கை ஐந்து  ஆண்டுகளுக்குள் அடைய உதவும். சென்ட்ரல் ரிட்ஜ் படுகையானது சுமார் 864 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.இதில், 423  ஹெக்டேர் பரப்பளவு மீட்டெடுக்கப்பட உள்ளது.இந்த குழு ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கும். இவ்வாறு கூறினார்.

Related Stories: