உலகையே அதிர வைத்த ஈழ தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்!: சர்வதேச நெருக்கடியை சமாளிக்க மோடியின் உதவியை நாடிய கோத்தபய ராஜபக்சே..!!

கொழும்பு: ஈழ தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசே பொறுப்பேற்க செய்வதற்கான தீர்மானம் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தீர்மானத்துக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இந்திய பிரதமர் மோடியின் உதவியை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதி போரில் நடைபெற்ற மனித உரிமை அத்துமீறல்கள் உலகையே அதிர வைத்தன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க இலங்கை அரசு மறுத்து வருவதால் அந்நாட்டுக்கு எதிராக பிரிட்டன், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் சில நிர்வாக பிரச்னை காரணமாக வாக்கெடுப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருவதால் சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும்படி இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு திரட்டி வருகிறது. ஏற்கனவே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடியை தொடர்புக்கொண்டு ஆதரவு கேட்ட நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பிரதமர் மோடியை தொடர்புக்கொண்டு பேசியுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெறும் வாக்கெடுப்பின் போது இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று மோடியிடம்  கோத்தபய ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவு செயலாளர் ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் மோடியுடன்  கோத்தபய பேசியிருப்பதால், இந்தியா எடுக்கப்போகும் நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: