நல்ல செய்தி சொல்கிறேன்: வேட்பாளர்களுக்கு உறுதியளித்த சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கு குற்றம்சாட்டப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஆனால்  சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.  இந்தநிலையில், சென்னையில் இருந்து கார் மூலமாக தஞ்சாவூர் சென்றுள்ள சசிகலா அங்கு உறவினரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அமமுக சார்பில்  வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலரும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த சந்திப்பின் போது ரங்கம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் சசிகலாவை நேரில் சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ‘தீவிர அரசியலில் நீங்கள் ஈடுபட  வேண்டும். தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பீர்கள் என மிகவும் எதிர்பார்த்தோம். பலரும் இதையே எதிர்பார்த்தார்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு சசிகலா, நான் அரசியலில் இருந்து ஒதுங்கி மட்டுமே இருக்கிறேன். தேர்தல்  முடியட்டும் ஒரு நல்ல செய்தி வரும். தேர்தல் பணிகளில் சிறப்பாக ஈடுபடுங்கள்’ என கூறியுள்ளார்.  சசிகலாவின் இந்த நிலைப்பாடு அமமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: