பலாத்காரம் செய்தவருடன் சேர்ந்து வாழ தண்டணையை ரத்து செய்ய கோரிய வழக்கு: போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கே இடமில்லை...சென்னை ஐகோர்ட் அதிரடி.!!!

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் சமரசத்துக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார், மருதுபாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கில் மருதுபாண்டி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, மருதுபாண்டி ஒரு மாதத்திற்குள் ரூ.1 லட்சம் தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசின் துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தருமபுரி மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மருதுபாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், வாழ்க்கையை அமைதியாக தொடர தண்டனையை ரத்த செய்யக் கோரிய சிறுமியின் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் சமரசத்துக்கு இடமில்லை. பாதிக்கப்பட்டவர் கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசம் செய்ய இயலாது எனக்கூறி மருதுபாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து, வாழ்க்கையை அமைதியாக தொடர தண்டனையை ரத்த செய்யக் கோரிய சிறுமியின் மனுவையும் ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Related Stories: