கோடைகாலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்: மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அறிவுரை

கோலார்: கோடைகாலம்  தொடங்கியுள்ளதால் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட  பஞ்சாயத்து தலைவர் சி.எஸ்.வெங்கடேஷ் அறிவுறுத்தினார். மாவட்ட  பஞ்சாயத்து அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பரிசீலனை கூட்டம் நடந்தது. அதற்கு  தலைமையேற்று நடத்திய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ், நடப்பு  நிதியாண்டு பட்ஜெட்டில் ஊரக பகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்துள்ள  நிதியில் என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில்  முடிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை, தொடங்கி நடந்து வரும் திட்டங்கள் எத்தனை,  இன்னும் தொடங்காமல் நிலுவையில் உள்ள திட்டங்கள் எத்தனை என்ற விவரங்களை  பெற்றார்.

அதை தொடர்ந்து அவர் பேசும்போது, பொதுவாக  கோடைகாலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். தற்போது கோடைகாலம்  தொடங்கியுள்ளதால், எந்தெந்த கிராமங்களில் குடிநீர் பஞ்சம் உள்ளது என்பதை  கண்டறிந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். டேங்கர் லாரிகள் மூலம் தினமும்  குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.  போர்வெல் போட்டு தண்ணீர் வசதி  ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கிராம புறங்களில் கால்நடைகளுக்கு தீவனம்  மற்றும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில்  உள்ள அரசு பள்ளிகளில் 2019-20ம் நிதியாண்டில் மேஜை, நாற்காலிகள் வாங்க  டெண்டர் விட்டு, குத்தகைதாரர்களுக்கு நிதி வழங்கியும் இன்னும் பொருட்கள்  வழங்காமல் உள்ளதாக கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த விஷயத்தில் மாவட்ட கல்வி  அதிகாரி கவனம் செலுத்த வேண்டும். நாற்காலிகள் ஒதுக்கீடு செய்யாத  குத்தகைதாரர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று உத்தரவிட்டார். ேமலும் கொரோனா இரண்டாவது அலை பரவியுள்ளதால்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டார்.

Related Stories: