கேப்டன் மித்தாலி போராட்டம் வீண் 5வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்ரிக்கா வெற்றி

லக்னோ: இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்க மகளிர் அணி, 4-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க மகளிர் அணி 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில்  விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தென்  ஆப்ரிக்கா தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், சம்பிரதாயமான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லக்னோவில்   நேற்று நடந்தது.

டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னணி வீராங்கனைகள்  பிரியா புனியா 18, மந்தானா 18, பூனம் ராவுத் 10ரன்னில்  ஆட்டமிழக்க, இந்தியா 12.1 ஓவரில் 53 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ஹர்மன்பிரீத் - கேப்டன் மித்தாலி ராஜ் இணை 4வது விக்கெட்டுக்கு 71* ரன் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது.  துரதிர்ஷ்டவசமாக ஹர்மன்பிரீத்  31வதுஓவர் முடிவில் காயம் காரணமாக  ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் 30ரன்  எடுத்திருந்தார்.  ஒரு முனையில் மித்தாலி உறுதியுடன் போராட, சக வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (2 பேர்  டக் அவுட்). இதனால் இந்தியா 49.3ஓவரில் 188 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மித்தாலி ராஜ் 79 ரன்னுடன் (104 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்)  ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியும் 10.2 ஓவரில் 27 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும்,  மிக்னன் டு பிரீஸ் 57 ரன் (100 பந்து, 4 பவுண்டரி), போஷ் 58 ரன் (70 பந்து, 8 பவுண்டரி) விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினர்.

தென் ஆப்ரிக்கா 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து வென்றது. காப் 36 ரன், டி கிளெர்க் 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி 3, ஹேமலதா, பிரத்யுஷா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம்  தென் ஆப்ரிக்கா 4-1 என்ற  கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. போஷ் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக போஷ், தொடரின் சிறந்த வீராங்கனையாக லிஸல் லீ  விருது பெற்றனர். அடுத்து இரு அணிகளும் மோதும் டி20 தொடர் மார்ச் 20, 21, 24 தேதிகளில் லக்னோ நகரிலேயே நடக்க உள்ளது.

Related Stories: