ஜெயலலிதா மறைவுக்கு திமுகவை குற்றம் சொல்வதை விட்டு ராமதாசை தான் சொல்லவேண்டும்: மேல்முறையீடுக்கு சித்தராமையாவை வலியுறுத்தியது பாமக தான்; ஆர்.எஸ்.பாரதி ‘பகீர்’ தகவல்

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில்  நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர் பழனிசாமி நாள்தோறும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர்கள் செய்த  தவறை எல்லாம் மறைப்பதற்காக திட்டமிட்டு 2, 3 நாட்களாக ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணம் மறைந்த தலைவர் கலைஞரும்,  மு.க.ஸ்டாலினும் தான் என்று அப்பட்டமான ஒரு பொய்யை சொல்லி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு நாங்கள் போட்ட மேல்முறையீடு  வழக்கு தான் காரணம் என்று சொல்வது திட்டமிட்ட பொய்யாகும்.

ஏனென்றால் கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நேரத்தில், திமுக அதை அரசியல் ரீதியாக  அணுகவில்லை. ஜெயலலிதா வழக் குமேல்முறையீட்டுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம், இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால்  ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட போது, அவரது கட்சி சார்பில் அவரே ஒரு மனுவினை தயார் செய்து, ஜி.ேக.மணியும், வக்கீல் பாலுவும் கர்நாடகத்துக்கு  சென்று அன்றைய முதல்வராக இருந்த சித்தராமையாவை நேரில் சந்தித்து, இந்த வழக்கில் தவறான தீர்ப்பு வந்துள்ளது. ஆகையால் மேல்முறையீடு  செய்ய வேண்டும் என்று அவரிடம் மனு கொடுத்தனர்.

  இந்த தகவல். 14.05.2015 அன்று தினகரன் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. அதேபோன்று ஆங்கில பத்திரிகைகளிலும் இந்த செய்தி  வெளியிடப்பட்டுள்ளது. இது உண்மையாக இருக்கும் போது, திட்டமிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் முதல்வர் பொய் சொல்வது எந்த  வகையில் நியாயம்.  அப்படி பார்த்தால் ஜெயலலிதா மீது அப்பீல் போட வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக் கொண்ட ராமதாசை, அவரது கட்சியான  பாமகவை முதல்வர் பழனிசாமி கூட்டணியில் சேர்த்திருப்பது ஜெயலலிதாவுக்கு செய்கிற துரோகமா? இல்லையா?  முதல்வர் சொன்ன  காரணத்தினால் இதை விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இதை சொல்வதற்கு எங்களுக்கு அவசியம் வந்திருக்காது.

இன்னும் ஒருபடி மேலே சென்று சொல்ல வேண்டுமானால், ஜெயலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைத்த போது கூட அந்த நினைவு மண்டபத்தை  பற்றி திமுக சார்பில் சட்டமன்றத்திலோ, வெளியிலோ எந்தவிதமான எதிர்ப்போ மு.க.ஸ்டாலினோ, திமுகவோ தெரிவிக்கவில்லை.

 ஆனால் பாமக வக்கீல் பாலு தான், அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். உண்மை நிலவரம் இப்படி இருக்க திட்டமிட்டு  பொய் சொல்கிற முதல்வர் பழனிசாமி இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மன்றத்தில் வீதி வீதியாக சென்று திமுக  விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.  எங்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சந்தேகம், ஜெயலலிதா மரணத்தை பற்றி விசாரிக்க ஒரு விசாரணை  கமிஷன் அமைக்கப்பட்டதே, அந்த கமிஷன் இன்னும் தனது அறிக்கையை தரவில்லை.

அதை தடுக்கும் சக்தி எது?. முதல்வர் பழனிசாமிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அறிக்கை வந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் எல்லாம் எங்களுக்கு  ஏற்படுகிறது.  இதை எல்லாம் மறைத்துவிட்டு எங்கள் மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம். இப்படிப்பட்ட துரோகங்களை ஜெயலலிதாவுக்கு  செய்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிரிகள் தப்பு செய்தால் கூட கோபம் வராது. ஆனால் கூடவே இருந்தவர்கள்  துரோகம் பண்ணும் போது தான் கோபம் வரும். கூடவே இருக்கும் ராமதாஸ் தான், ஜெயலலிதாவின் மன உளைச்சலுக்கு காரணமானவர் என்பது தான்  எனது குற்றச்சாட்டு.

Related Stories: