கஸ்தூரிபா மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

புதுடெல்லி வடக்கு டெல்லி மாநகராட்சி சார்பில் கஸ்தூரிபா மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், சம்பளம் உடனே வழங்க கேட்டும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு டாக்டர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஜெய்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரண்டு மாத சம்பளத்தை அடுத்த 10 நாட்களுக்குள் தயார் செய்து வழங்குவதாக அவர் உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றார்கள்.

இதுதொடர்பாக கஸ்தூரிபா மருத்துவமனை உறைவிட மருத்துவர்கள் சங்க தலைவர் சுனில் பிரசாத் கூறுகையில்,’ ஆங்கிலேயர் காலத்து மருத்துவமனை இது. இந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். 60ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மூத்த டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். எங்களுடன் மேயர் ஜெய்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த உறுதி மொழியை ஏற்று நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம்’ என்றார்.

இதை மேயர் ஜெய்பிரகாஷ் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,’ இரண்டுமாத சம்பளத்தை 10 நாளில் ஏற்பாடு செய்து வழங்குவதாக மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பழைய டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனை இது. கொரோனாவுக்கு எதிரான போரில் டாக்டர்களின் சேவை நமக்கு தேவை. எனவே நாங்கள் கொடுத்த உத்தரவாதத்தை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்’ என்றார்.

Related Stories: