கோவையில் ரூ.1,621 கோடி மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை..!!

சென்னை: கோவையில் 1,621 கோடி ரூபாய் மதிப்பிலான அவிநாசி சாலை மேம்பாலம் கட்டும் பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் உப்பிலிப்பாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை கிட்டத்தட்ட 1621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4 வழிசாலையாக இந்த உயர்நிலை மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதற்காக 350 தாணூன்றுகளும் அமைக்கப்படவிருக்கின்றன. 48 மாதங்களில் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தை அண்மையில் காணொலி காட்சி வாயிலாக அமித்ஷா திறந்து வைத்திருந்தார். இந்நிலையில், அவிநாசி மேம்பாலம் கட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி அமர்வில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் உட்பட 8 பேர் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். மனுவில், பாலத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முறையாக பின்பற்றப்படவில்லை.

மேம்பாலம் கட்ட குறிப்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை முறையாக பெறப்படவேண்டும். இவை எதுவும் மேம்பாலம் கட்டும் பணியில் பின்பற்றப்படவில்லை. எனவே இப்பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சம்பந்தப்பட்ட மனுதாரரின் நிலங்களை மட்டும் கையகப்படுத்த தடை விதித்திருந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். அதில், பாலம் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 5ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை சட்டவிரோதமானது என்றும், பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல் தன்னிச்சையாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுவதால் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வு, மேம்பாலம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த வழக்கு குறித்து கோவை மாவட்ட ஆட்சியர், நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, பாலம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ள கட்டுமான நிறுவனர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்திருக்கிறார்.

Related Stories: