சிபிஐ விசாரணை நடத்த அனுமதி கோரி மாநில அரசுகளிடம் பொது ஒப்புதல் பெறும் நடைமுறையை நீக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: சிபிஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், சிபிஐ விசாரணை மேற்கொள்ள மாநில அரசுகளிடம் பொது ஒப்புதல் பெறும் நடைமுறையை நீக்க வேண்டுமென நாடாளுமன்ற குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில், தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி அனுமுலா ரேவந்த் ரெட்டி, ‘‘2014க்குப் பிறகு அரசு கொள்கையை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக வழக்கு போடப்படுகிறது. 2019ல் தீர்க்கப்பட்ட வழக்கு விகிதம் வெறும் 3.3 சதவீதம் மட்டுமே. இதிலிருந்து அரசியல் ரீதியாக வழக்குகள் பதிவு செய்வதை அறிய முடிகிறது. இளம் தலைவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டால் அது முடியவே 4-5 ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை அவருக்கு வேலை, பாஸ்போர்ட், விசா எதுவும் கிடைக்காது.

சமூக ஆர்வலர் திசா ரவி போன்ற குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது எந்த ஆதாரத்தையும் அரசு சமர்பிக்கவில்லை,’’ என்றார். மற்றொரு காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி பேசுகையில், ‘‘தேச துரோக வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. பேச்சு சுதந்திரத்தை நசுக்க பயன்படுத்தப்படுகிறது,’’ என்றார். இதற்கு மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, ‘‘மிசா சட்டத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் ஜனநாயகத்தை பற்றி பாடம் எடுக்கக் கூடாது,’’ என்றார். இந்த விவாதத்தால் அவையில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, பல்வேறு அமைச்சக நாடாளுமன்ற குழுக்கள் நேற்று தங்கள் அறிக்கையை அவையில் தாக்கல் செய்தன.

மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் பென்சன் அமைச்சக குழு தாக்கல் செய்த அறிக்கையில், ‘சிபிஐக்கு அதிக அதிகாரத்தை தரும் வகையிலான புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். டெல்லியைத் தவிர, நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ தனது அதிகாரத்தைப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொது ஒப்புதல் பெற்றிருப்பது அவசியம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பொது ஒப்புதல் மறுக்கப்படுவதால் சிபிஐ தனது கடமையை செய்ய முடியாமல் போகிறது. இதை தவிர்க்கும் வகையில் பொது ஒப்புதல் பெறும் நடைமுறை நீக்கப்பட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: