பெண்களுக்கு பணப்பட்டுவாடா நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் பிரிவினர் புகார்

நத்தம்: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பிரசாரத்தின்போது அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் பிரிவு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் காட்டுவேலம்பட்டி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்க பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு அதிமுகவினர் தட்டில் பணம் போட்டு விநியோகம் செய்தனர். மேலும் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனும் பணம் கொடுத்தது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் விதிமீறி பணப்பட்டுவாடா செய்த நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுகவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியதாஸ், நத்தம் காவல்நிலையத்தில் ஆரத்தி தட்டில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: