பெலகாவி, மஸ்கி, பசவகல்யாண் தொகுதிகளுக்கு ஏப்ரல் 17ம் தேதி இடைத்தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காலியாக இருக்கும் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் மஸ்கி, பசவகல்யாண் ஆகிய இரண்டு பேரவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 17ம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் அங்கடி காலமானதால் பெலகாவி மக்களவை தொகுதி காலியாகவுள்ளது. அதேபோல் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த பிரதாப்கவுடா பாட்டீல் ராஜினாமா செய்ததின் காரணமாக மஸ்கி பேரவை தொகுதியும் உடல்நலம் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர் பி.நாராயணராவ் காலமானதால் பசவகல்யாண் தொகுதி காலியாகவுள்ளது. இத்தொகுதிக்கு மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பெலகாவி மக்களவை தொகுதி மற்றும் மஸ்கி, பசவகல்யாண் ஆகிய இரு பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 17ம் தேதி நடத்தப்படும். இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் அதிகாரிகள் முறைப்படி தேர்தல் நடப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவார்கள். மனுதாக்கல் செய்ய மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீது 31ம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனு வாபஸ்பெற ஏப்ரல் 3ம் தேதி கடைசி நாளாகும். போட்டி இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 17ம் தேதி வாக்கு பதிவு நடத்தப்படும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படும் என்று கூறியுள்ளது. தேர்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரணதீப்சிங் சுர்ஜிவாலே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் துணைமுதல்வர் பரமேஷ்வர், மாநில செயல்தலைவர்கள் ஈஸ்வர் கண்ட்ரே, சதீஷ்ஜார்கிஹோளி, சலீம் அகமது, ராமலிங்கரெட்டி, துருவநாராயண், மேலவை எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீரப்பமொய்லி, கே.எச்.முனியப்பா, ரகுமான்கான் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில் இடைத்தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்கும் கூட்டம் இரண்டொரு நாளில் பாஜ மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடக்கிறது. இதில் முதல்வர் எடியூரப்பா, கட்சி மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி, துணைமுதல்வர்கள் கோவிந்தகார்ஜோள், லட்சுமண்சவதி, அஷ்வத் நாராயண், அமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, ஆர்.அசோக் உள்பட மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் பாஜ கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் மஜத தேர்தல் குறித்து சிந்திக்கவில்லை. காரணம் அக்கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க முடிவு செய்துள்ளது.

சிந்தகி தொகுதி காலி

இந்நிலையில் சிந்தகி தொகுதி மஜத உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.சி.மனகூளி உடல் நலம் பாதித்து காலமானார். இதனால் காலியாக இருக்கும் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், மஸ்கி, பசவகல்யாண் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு சிந்தகி தொகுதி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: