சொத்து ஆலோசகர் மிரட்டல் வழக்கில் நிழலுலக தாதா ரவி பூஜாரி மீண்டும் கைது

பெங்களூரு: காந்திவலியை சேர்ந்த சொத்து ஆலோசகரை மிரட்டிய வழக்கில் நிழல் உலக தாதா ரவி பூஜாரி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரி. இவர் மீது மும்பையில் 49 வழக்குகள் நிலுவையில் உள்ளன. செனெகல் நாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்த ரவி பூஜாரி கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் கர்நாடக அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 2016ம் ஆண்டு விடுதி உரிமையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் கடந்த மாதம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு மும்பை அழைத்து வரப்பட்டார்.

அந்த வழக்கில் காவல்துறை நடத்திய விசாரணை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் பூஜாரி மீண்டும் 2 வது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், காந்திவலியை சேர்ந்த சொத்து ஆலோசகருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் நிழல் உலக தாதா ரவி பூஜாரியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் 20 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில் பூஜாரியின் வக்கீல் அவ்வளவு நாட்கள் விசாரணை தேவையில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து வரும் சனிக்கிழமை வரை ரவி பூஜாரியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது’’ என தெரிவித்தார்.

Related Stories: