தொழிலாளர்கள் மகிழ்ச்சி: சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6-ம் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6-ம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம்தேதி முதல் தொடங்கியது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கமல், சீமான் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக, உணவு நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும், 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 135பி அடிப்படையில் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6-ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: