வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்.

 

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி காலமானார்.

வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் பல வாரங்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று மாலை முதலே அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது.

இந்த நிலையில் 80 வயதில் பேகம் கலிதா ஜியா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது கட்சி தரப்பில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா நம்மிடையே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பேகம் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நவம்பர் 23ஆம் தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் மாத தொடக்கத்தில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

டிசம்பர் 11ஆம் தேதி முதலே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து வெளிநாட்டு மருத்துவர்களும் கூட பேகம் கலிதா ஜியாவுக்கு சிகிச்சை அளித்தனர். உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல அக்கட்சி நிர்வாகிகள் முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால், விமானப் பயணம் மேற்கொள்ள அவரது உடல்நிலை அனுமதிக்கவில்லை.

வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும், முன்னாள் பிரதமராகவும், அந்நாட்டின் அரசியல் விவாதங்களை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். 1991 – 1996 மற்றும் 2001 – 2006 ஆகிய 10 ஆண்டுகள் வங்கதேச பிரதமராக செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் பேகம் கலிதா ஜியா. இவரது மறைவு அக்கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

Related Stories: