தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.12.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை. சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் (Iconic Projects) முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலத்தின் சமூகப் பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பெரிய அளவிலான பயன்தரக்கூடிய உள்கட்டமைப்பு திட்டங்களான முத்திரைத் திட்டங்களை குறித்த காலத்திற்குள் திட்டமிட்டபடி நிறைவேற்றுவதற்கும், பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் அத்திட்டங்களின் முன்னேற்றத்தினைத் கண்காணித்திட தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். துணை முதலமைச்சர் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் ஆகியோரால் நடத்தப்பட்டு வருகிறது.
அடையாளம் காணப்பட்ட 288 முத்திரைத் திட்டங்கள்;
அரசின் 24 நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.3,17,693 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 288 திட்டங்கள் முத்திரைத் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டு அதன் செயல்பாட்டினை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 85 திட்டங்கள் இதுவரை முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
முதலமைச்சர் முத்திரைத் திட்டடங்கள் குறித்த ஆய்வு;
கடந்த 22.12.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 6 துறைகளைச் சார்ந்த சுமார் 87,941 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.அதன் தொடர்ச்சியாக இன்று (30.12.2025) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பொதுப்பணித் துறை ஆகிய 6 துறைகளைச் சார்ந்த சுமார் 58,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான செயல்பாட்டில் உள்ள 27 முத்திரைத் திட்டங்களின் பணி முன்னேற்றத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்புடைய துறைச் செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மினி டைடல் பூங்கா, சூலூர் பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா, ஓரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்கா மற்றும் கோயம்புத்தூர் பொது பொறியியல் வசதி மையம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு;
இவ்வாய்வு கூட்டத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் கீழ் சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக துறைச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. சூலூர் பாதுகாப்பு உபகரண உற்பத்தி பூங்கா மற்றும் ஓரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கும் பணிகள் ஜனவரி மாதத்திற்குள்ளும், கோயம்புத்தூர் பொது பொறியியல் வசதி மையம் அமைக்கும் பணி பிப்ரவரி. 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
உடன்குடி அனல் மின் திட்ட (அலகு I) அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு;
எரிசக்தி துறையின் கீழ், 13,076.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 2×660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்ட (அலகு I) பணிகள் ஜனவரி, 2026-க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், வரும் கோடை காலத்தில் மாநிலம் முழுவதும் தடையின்றி சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைப் பணிகள் குறித்து ஆய்வு;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ், 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைப் பணிகள் பிப்ரவரி 2026-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
நீலகிரி சூழல் பூங்கா உள்ளிட்ட பிற முத்திரை திட்டங்கள் குறித்து ஆய்வு;
சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறையின் கீழ், நீலகிரியில் சூழல் பூங்கா அமைப்பதற்கு பிப்ரவரி 2026-க்குள் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்படுமென துறைச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, இத்துறைகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பிற முத்திரைத் திட்டங்களையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் த. உதயச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண்ராய், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் வே. அமுதவல்லி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
