எங்குபார்க்கினும் துப்பாக்கி குண்டு சத்தம், உயிரிழப்பு, ரத்தக்களறி!: மியான்மரில் நேற்று ராணுவத்தால் 39 பேர் சுட்டுக்கொலை..!!

நாய்பிடாவ்: மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கு எதிரான மக்கள் புரட்சியில் நேற்று மட்டும் பொதுமக்கள் 39 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் எங்கு பார்த்தாலும் ராணுவம், போலீசாரின் துப்பாக்கி சத்தமும், போராட்டக்காரர்களின் மரண ஓலத்தை மட்டுமே கேட்க முடிகிறது. ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவத்தை எதிர்த்து பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சனிக்கிழமை வரை 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்.

ஆனால் நேற்று யான்கோ நகரில் உள்ள ஹைலைன் தரியார் என்ற இடத்தில் 23 பேரை ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. மற்ற இடங்களில் மேலும் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. மியான்மரில் மக்கள் போராளி என்று அறியப்படும் ஆங் சான் சூச்சியின் கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சி, கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சியை பிடித்தது. ஆனால் அதில் மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 1ம் தேதி ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

ஆங் சான் சூச்சியை கைது செய்ததோடு நாட்டின் அதிபர் வின் மின்ட் மற்றும் எம்.பி.க்கள் பலரையும் ராணுவம் கைது செய்தது. அங்கு ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்  நடத்தி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின் போது போலீஸ் ஒருவர் போராட்டக்காரர்களை மிரட்டி டிக் டாக் வீடியோ ஒன்றினை வெளியிட்டதால் மோதல் உச்சமடைந்தது. இதனிடையே ராணுவம் தங்களுக்கு அளித்த வலியை என்றும் மறக்க போவதில்லை என கூறி ஏராளமான இளைஞர்கள் தங்கள் உடல் முழுவதும் வார்த்தைகளை பச்சை குத்தி வருகின்றனர்.

Related Stories: