ஓபிஎஸ்.க்கு பெப்பே காட்டிய ஜேபிஎஸ் காலையில் அதிமுக, மாலையில் அமமுக: போடியில் நடந்த தேர்தல் சுவாரஸ்யம்

போடியில் காலையில் அதிமுகவில் இணைந்த பிரமுகர் மாலையில் மீண்டும் அமமுகவில் இணைந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம், போடி அருகே ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஜவுளிக்கடை பன்னீர்செல்வம். அதிமுக நிர்வாகியாக இருந்த இவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி.தினகரனின் அமமுகவில் ஐக்கியம் ஆனார். போடி ஒன்றிய அமமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். ‘‘அம்மாவிற்கு துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் இணையமாட்டேன். உங்கள் வெற்றிக்கு உயிர்மூச்சு உள்ளவரை பாடுபடுவேன்’’ என்று கூறி அதிமுகவில் இணைந்தார்.

 இதனால் மனம் குளிர்ந்த ஓபிஎஸ், ஜவுளிக்கடை பன்னீர்செல்வத்திற்கு சால்வை அணிவித்து வரவேற்றார். ‘‘உடனே தேர்தல் வேலையை செய்யுங்கள்’’ என கூறி அனுப்பி வைத்தார். இதனிடையே அமமுக போடி தொகுதி வேட்பாளர் மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி நேற்று மாலை பிரசாரத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவரை சந்தித்த ஜவுளிக்கடை பன்னீர்செல்வம், ‘‘அதிமுகவில் இருந்து விலகி மீண்டும் அமமுகவில் இணைகிறேன். இனிமேல் சின்னம்மாவின் கழகத்தை விட்டு வெளியேற மாட்டேன். உங்கள் வெற்றிக்கு இரவு பகலாக உழைப்பேன்’’ என்று உறுதியளித்தார். இதை பார்த்த அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். காலையில் ஓபிஎஸ் முன்பு அதிமுகவில் இணைந்துவிட்டு மாலையில் மீண்டும் அமமுகவில் இணைந்த ஜேபிஎஸ் (ஜவுளிக்கடை பன்னீர்செல்வம்) தான் தற்போது போடியின் ஹாட் டாபிக்.

Related Stories: