மஸ்க், பெசோஸை பின்னுக்கு தள்ளி 2021ல் அதிக பணம் ஈட்டுவதில் தொழிலதிபர் அதானி முதலிடம்: கூடுதலாக 1.17 லட்சம் கோடி சொத்து சேர்ந்தது

புதுடெல்லி: உலகளவில் இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்ததில் எலன் மஸ்க்,  பெசோஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி  நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை  ப்ளூர்பெர்க் பொருளாதார இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், உலகின்  நம்பர்-1 பணக்காரராக அமேசானின் ஜெப் பெசோஸ், அடுத்த இடத்தில் டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் உள்ளனர். இந்நிலையில், 2021ல் அதிக  பணம் சம்பாதித்தவர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்டுள்ளது. அதில்,  பெசோஸ், மஸ்க்கை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பவர் இந்திய  தொழிலதிபர் கவுதம் அதானி ஆவார். முதல் தலைமுறை தொழிலதிபரான  அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து,  மொத்த சொத்து மதிப்பு 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதன் மூலம், அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் பணம்  சம்பாதித்தவராக ஆகியுள்ளார். இந்த கால கட்டத்தில் பெசோஸ் 55 ஆயிரம்  கோடியும், மஸ்க் 74 ஆயிரம் கோடியும் சம்பாதித்துள்ளனர். ஆசியாவின் நம்பர்-1  பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி கூட 58 ஆயிரம் கோடி தான்  சம்பாதித்துள்ளார். இதன் மூலம், அதானி குழும பங்குகள் அனைத்து 50 சதவீத  வளர்ச்சி கண்டன. குறிப்பாக, அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%,  அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும்  52 % அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமம் இந்தியாவில்  துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்க  தொழில்களில் வலுவாக காலூன்றி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க  தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவர் மட்டும் எப்படி? சந்தேகம் கிளப்பும் ராகுல்:

அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது குறித்த செய்தியை தனது டிவிட்டரில்  பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘2020ம் ஆண்டில் உங்கள்  சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்தது? பூஜ்ஜியம். நீங்கள் வாழவே சிரமப்பட்ட  நிலையில், அதானி ₹12 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 50  சதவீதம் அதிகரித்துள்ளது. அது, எப்படி என்று எனக்கு சொல்ல முடியுமா?’ என  கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: