குப்பைகளை எரிப்பதால் துர்நாற்றம் மயிலாடுதுறை- தருமபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம்

மயிலாடுதுறை : குப்பைகளை எரிப்பதை கண்டித்து மயிலாடுதுறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து அவற்றை நவீன இயந்திரங்களை கொண்டு அரைத்து கூழாக்கி மட்க வைத்து கிடைக்கும் எருக்களை விற்பனை செய்வதற்காக 4 இடங்களில் எரு தயாரிக்கும் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 கடந்த ஓராண்டாக குப்பைகளை கையாள்வதில் தடங்கல் ஏற்பட்டு ஆங்காங்கே சேமிக்கப்பட்டு அதை நகராட்சி ஊழியர்களே கொளுத்தி விட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை- தருமபுரம் சாலையில் திம்மநாயக்கன் படித்துறைக்கு செல்லும் பாதையில் உள்ள நகராட்சி இடத்தில் குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்கும் இயந்திரம் இயங்கி வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஆலைக்குள் புகுந்து இயந்திரத்தின் காற்றாடியை ஒரு சில விஷமிகள் உடைத்தனர். தற்போது தான் அது சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்குகிறது. ஆனால் குப்பைகளை உடனடியாக அரைக்க முடியாத அளவுக்கு தேக்கம் ஏற்படுகிறது. இதனால் திம்மநாயக்கன் படித்துறை அருகே குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொளுத்தி விடுகின்றனர்.

திம்மநாயக்கன் படித்துறைக்கு செல்லும் பகுதியில் குப்பைகளை மூட்டை, மூட்டையாக எரித்து விடுகின்றனர். மேலும் எரு தயாரிக்கும் ஆலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தருமபுரம்- மயிலாடுதுறை சால டபீர் தெரு பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த தகவல் கிடைத்ததும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களில் சரி செய்து விடுகிறோம். இனிமேல் இங்கு குப்பைகள் கொட்டப்படாது. சாலையோரங்களில் குப்பைகளை பொதுமக்களும் வீசக்கூடாது என்றனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: