கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி

தோஹா: தோஹாவில் நடந்து வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஸ்விலியிடம் தோல்வியடைந்தார். முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் ஆடினார். அதன் பின்னர் அவர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக கிடைத்த ஓய்வை பயன்படுத்திக் கொண்டு, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் 2021 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை.

ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், முழங்கால் அறுவை சிகிச்சைக்கான காயங்கள் ஆறிய பின்னர், பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளிக்கு பின்னர், தோஹாவில் தற்போது நடந்து வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அவர் பங்கேற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீரர் டான் இவான்சை 3 செட்களில் போராடி வீழ்த்திய அவர், நேற்று இரவு நடந்த காலிறுதிப் போட்டியில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஸ்விலியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றிய பெடரர், 2வது செட்டில் தடுமாறினார். அந்த செட்டில் பெடரருக்கு இணையாக நிகோலசும் ஏஸ் சர்வீஸ்களை போட்டு தாக்கினார். தவிர முதல் சர்வீஸ்கள் அனைத்தும் அவருக்கு துல்லியமாக அமைந்தன.

இதனால் அந்த செட்டை 1-6 என்ற கணக்கில் பெடரர் இழந்தார். 3வது செட்டில் பெடரர் நிதானமாகவும், எச்சரிக்கையாகவும் ஆடினார். அதற்கு ஓரளவு பலன் கிட்டியது. ஆனாலும் நிகோலசின் கேமை பிரேக் செய்ய முடியவில்லை. இருவரும் தங்களது கேம்களை தக்க வைத்துக் கொண்டு 5-5 என்ற சமநிலையை எட்டினர். ஆனால் சரியாக 11வது கேமை பிரேக் செய்த நிகோலஸ் 6-5 என முன்னிலை பெற்று, தனது அடுத்த கேமை எளிதாக வசப்படுத்திக் கொண்டார். இதன் மூலம் 3-6, 6-1, 7-5 என 3 செட்களில் இப்போட்டியில் வென்று, அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்த தோல்வி குறித்து பெடரர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ‘ஓராண்டு இடைவெளிக்கு பின்னர், திரும்பி வந்துள்ளேன். அடுத்து பிரெஞ்ச் ஓபனில் சந்திக்கலாம்’ என்று கூறி விடை பெற்றார்.

Related Stories: