இங்கிலாந்துக்கு எதிராக இன்று முதல் டி.20 போட்டி: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக ஆடுவார்..! கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

அகமதாபாத்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. தவான், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் என அனைத்து வீரர்களும் பார்மில் உள்ளதால் அணியை தேர்வு செய்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும். இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: ரோகித்சர்மாவுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரோகித்சர்மாவுக்கு ஓய்வு அல்லது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டால் தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படும். வருண் சக்ரவர்த்தி உடல்தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். உடற்தகுதியில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் வருகையால் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. வீரர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். புவனேஸ்வர்குமார் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவர் 100 சதவிகித உடற்தகுதிக்கு திரும்புவதற்கு மிகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அவர் ஒரு ஸ்மார்ட் ஆபரேட்டர், அவர் தொடர்ந்து அந்த அனுபவத்தை களத்தில் கொண்டு வருகிறார். அடுத்த சில மாதங்களில் அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு உள்ளது, மேலும் பல இந்திய வெற்றிகளுக்கு அவர் பங்களிக்க விரும்புகிறார், குறிப்பாக டி 20 உலகக் கோப்பையில் எங்களுக்கு அனுபவமிக்க டி 20 பந்துவீச்சாளர்கள் தேவைப்படும்.

அவரைத் திரும்பப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் இங்கிருந்து வலுவாகக் காட்டுவார் என்று நம்புகிறேன். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி வருவதால் அஸ்வின் வெள்ளை பந்து போட்டிகளில் இடம்பெறுவது கடினம் தான். இங்கிலாந்து உலகின் நம்பர் 1 அணி. அவர்களை வீழ்த்த டுமையாக போராட வேண்டி இருக்கும் என்றார். மறுபுறம் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜோஸ்பட்லர், டேவிட் மலன், ஜேசன்ராய் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பென்ஸ்டோக்ஸ், மொயின் அலி, சாயம் கரன் என சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். சுழலில் அடில்ரஷித் அசத்த காத்திருக்கிறார். வேகத்தில் மார்க்வுட், ஆர்ச்சர், ஜோர்டன் வலு சேர்க்கின்றனர். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

Related Stories: