அசாமில் பாஜகவுக்கு சிக்கல்?.. நீண்டகாலமாக கட்சியிலிருந்தவர்கள் விலகல்: ஏற்கனவே விலகிய சும் ரோங்ஹாங் காங்கிரசில் இணைந்தார்

குவகாத்தி: அசாம் மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருவது தலைமைக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளுக்கு நடக்கும் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  பா.ஜ.க. கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. அசாமில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளால் ஆளும் பாஜக கட்சி உற்சாகத்தில் இருந்தது. அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர களப்பணியில் பாஜக ஈடுபட்டிருந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத 2 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அசாம் மாநிலத்தின் ஹோஜை தொகுதியின் ஷிலத்யா தேவ் மற்றும் சில்சார் தொகுதியின் திலீப்குமார் பால் ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் உள்ளனர்.

இருவரும் வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறாததை அடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். சுயேட்சையாக தேர்தல் களம் காண போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமாக இருந்தவருமான சும் ரோங்ஹாங் ஏற்கனவே கடந்த வாரம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசுக்கு தாவியிருந்தார். அதற்குள் 2 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள அசாம் கனபரிஷத் கட்சியின் எம்எல்ஏவான சத்யபரத்தா கலிட்டா அக்கட்சியிலிருந்து விலகி இருந்தார்.

தேசிய குயடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்த பாஜகவுடன் கூட்டணியில் இருக்க தான் விரும்பவில்லை என அவர் காரணம் கூறியிருந்தார். இதே காரணங்களுடன் மேலும் சில எம்எல்ஏக்களும் அசாம் கனபரிஷத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரசின் மெகா கூட்டணிக்கு எதிராக போட்டியிட வேண்டிய நிலையில் சொந்தக் கட்சிக்குள்ளும், கூட்டணி கட்சியிலும் பிளவை சந்தித்துக் கொண்டிருக்கிறது பாஜக. 

Related Stories: