விஜய் ஹசாரே டிராபி கேப்டன் பிரித்வி ஷா அதிரடியில் பைனலுக்கு முன்னேறியது மும்பை: 7 இன்னிங்சில் 4 சதம் விளாசி அசத்தல்

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் கர்நாடகா அணியை 72 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.பாலம் ஏ மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீசியது. மும்பை அணி 49.2 ஓவரில் 322 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரரும் கேப்டனுமான பிரித்வி ஷா அமர்க்களமாக விளையாடி 165 ரன் (122 பந்து, 17 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். நடப்பு தொடரில் பிரித்வி விளாசிய 4வது சதம் இது. ஆதித்யா தாரே 16, ஷாம்ஸ் முலானி 45, ஷிவம் துபே 27, அமான் ஹகிம் கான் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். கர்நாடகா பந்துவீச்சில் விஜய்குமார் விஷாக் 4, பிரசித் கிரிஷ்ணா 3, ரோனித், கோபால், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய கர்நாடகா 42.4 ஓவரிலேயே 250 ரன்னுக்கு சுருண்டது. தேவ்தத் படிக்கல் 64 ரன் (64 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), பி.ஆர்.ஷரத் 61 ரன் (39 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), கோபால் 33, கருண் நாயர் 29, கவுதம் 28 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மும்பை பந்துவீச்சில் தேஷ்பாண்டே, தனுஷ் கோடியன், சோலங்கி, முலானி தலா 2 விக்கெட், குல்கர்னி, ஜெய்ஸ்வால் தலா 1 விக்கெட் எடுத்தனர். 72 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மும்பை அணி பைனலுக்கு முன்னேறியது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார். உத்தர பிரதேசம் தகுதிடெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் உத்தர பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. டாஸ் வென்று பேட் செய்த குஜராத் 48.1 ஓவரில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (ராவல் 23, ஹெத் படேல் 60, பியுஷ் சாவ்லா 32). அடுத்து களமிறங்கிய உத்தர பிரதேசம் 42.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்து வென்றது (கேப்டன் கரண் ஷர்மா 38, அக்‌ஷ்தீப் நாத் 71, உபேந்திரா யாதவ் 31*). அக்‌ஷ்தீப் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாளை மறுநாள் (மார்ச் 14) நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை - உத்தர பிரதேசம் மோதுகின்றன.

* நடப்பு தொடரில் மும்பை கேப்டன் பிரித்வி 7 இன்னிங்சில் 754 ரன் (அதிகம் 227*, சராசரி 188.50, சதம் 4), கர்நாடகா வீரர் படிக்கல் 7 இன்னிங்சில் 737 ரன் (அதிகம் 152, சராசரி 147.40, சதம் 4, அரை சதம் 3) விளாசி முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் கோஹ்லி (2008), படிக்கல் (2021) ஆகியோருடன் பிரித்வி (2021) நேற்று இணைந்தார்.

Related Stories: