பாபநாசம்-சாலியமங்கலம் சாலை சீரமைப்பு மும்முரம்: தினகரன் செய்தி எதிரொலி

பாபநாசம்: பாபநாசம் - சாலியமங்கலம் சாலை முக்கியமான சாலையாகும். இச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பாபநாசத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கருக்காகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துச் செல்கின்றனர். தஞ்சாவூர், திட்டை செல்பவர்கள் கூட இந்த சாலை வழியாகச் சென்று வருகின்றனர். இந்தச் சாலையில் பாபநாசம் அடுத்த வளத்தாமங்கலத்திலிருந்து தேவராயன் பேட்டை செல்லும் சாலையானது 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் இருந்தது.

இந்தச் சாலையில் வசிக்கின்றவர்கள் ஆட்டோவை கூப்பிட்டால் கூட, சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் ஆட்டோ டிரைவர்கள் வரமாட்டார்கள். இந்தச் சாலையில் நெல் கொள்முதல் நிலையம், துவக்கப் பள்ளி, குடியிருப்பு கள் இருந்தும் பல ஆண்டு காலமாக சாலைப் போடப் படவில்லை. குண்டும், குழியுமான சாலையில் சென்று வந்த வாகனங்கள் பழுதடைந்தன. வாகனங்கள் செல்லும் போது புழுதிப் பறந்ததால் குடியிருப்பு வாசிகள், நடந்துச் செல்வோர் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து தினகரன் நாளிதழில் பலமுறை செய்தி வந்தது. இதன் பயனாக தற்போது இந்தச் சாலை போடும் பணி நடைப்பெற்று வருகிறது. இது குறித்து முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அம்பிகாவின் கணவர் சுவாமிநாதன் கூறுகையில், குண்டும், குழியுமான இந்தச் சாலையின் நிலை குறித்து தினகரனின் நாளிதழில் முறைசெய்தி படத்துடன் வெளியானது. தற்போது சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

Related Stories: