இங்கி.க்கு எதிரான டி20 தொடர்; உடற்தகுதியில் தேர்ச்சி பெறாத வருண் சக்ரவர்த்தி நீக்கம்: ஆடும்லெவனில் இடம் பெற கடும்போட்டி

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 5 டி.20 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டி வரும் 12ம் தேதி நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். டி.20 அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றிருந்தார். ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் 29 வயதான வருண் சக்ரவர்த்தி அதில் கலக்கியதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி.20 தொடரில் சேர்க்கப்பட்டார். ஆனால் தோள்பட்டை காயம் காரணமாக வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் 20 அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டிருந்த நிலையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2வது முறையாக அவர் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐபிஎல்லில் மும்பை அணிக்காக ஆடி வரும் 21 வயதான ராகுல் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் ராகுல் தேவதியாவும் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். அவருக்கு உடற்தகுதியை நிரூபிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா அல்லது மாற்று வீரர் சேர்க்கப்படுவாரா என்பது தெரியவில்லை.

இதனிடையே ஆடும் லெவனில் இடம் பிடிக்க இந்திய வீரர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 11 வீரர்களை தேர்வு செய்வதில் நிர்வாகத்திற்கு குழப்பம் நீடிக்கிறது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான், 3வது வரிசையில் விராட் கோஹ்லி, அடுத்தாக ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்குவர். விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் அல்லது கே.எல்.ராகுலுக்கு இடையே கடும்போட்டிஉள்ளது. ஹர்திக்பாண்டியா பந்துவீசவும் தயாராகி உள்ளதால் அவருக்கு6வது வரிசையில் வாய்ப்பு கிடைக்கலாம். இவர்களை தவிர சூர்யகுமார்யாதவ், இஷான் கிஷன் ஆகியோரும் காத்திருக்கின்றனர்.

ஆல்ரவுண்டர்வரிசையில் வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர்பட்டேல் இடையே போட்டி உள்ளது. பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்,டி.நடராஜன் என வரிசையில் உள்ளனர். இவர்களில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடராஜன் காயம்

நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டுள்ளது. நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார்.

Related Stories: